14. பிரிந்து போ தேசிய மொழிக ளென்று செப்பினை பத்தும் நான்கும் பேசிய துண்மை யென்றால் பேணுவை சமமாக் கொண்டே; வீசிய சொன்ம றந்து விரைந்துநீ இந்தி யென்னும் ஊசியை நுழைக்க வந்தால் அதன்நுனி ஒடிந்து போகும். உன்மொழி மட்டு மென்ன உலகிலே உயர்ந்த ஒன்றா? என்மொழி மட்டுமென்ன இழிந்ததா? எண்ணம் என்ன? பொன்னெலாங் கோடி கோடி பொழிகிறாய் வளர்க்க வேண்டி! என்வரிப் பங்கும் உண்டால் எதிர்க்கவும் உரிமை யுண்டு. உனக்கென்ன உரிமை யுண்டோ எனக்குமவ் வுரிமை யுண்டாம் எனக்குள வுரிமை கொல்ல எண்ணினை யாகின் அன்றே எனக்குனக் குரிய பங்கைப் பிரித்திட எழுவேன் கண்டாய் மனத்தினிற் பட்ட ஒன்றை வாய்திறந் தெடுத்துச் சொன்னேன். |