பக்கம் எண் :

36கவியரசர் முடியரசன் படைப்புகள் - 5

உலகிலே நீயும் நானும்
      உறவுடன் பிறந்தா வந்தோம்
தலைதடு மாறி என்னைத்
      தாள்பணி யென்று சொன்னால்
நிலைதடு மாறிப் போகும்
      நெஞ்சிலே பதித்துக் கொள்வாய்
*சிலையென என்னை யெண்ணின்
      சீரழிந் தொழிந்து போவாய்.

வெள்ளையன் விடுத்துச் சென்றான்
      *விரகினில் எடுத்துக் கொண்டாய்
கொள்ளையும் அடித்து விட்டாய்
      கொடுஞ்செயல் பலவுஞ் செய்தாய்
வெள்ளைநெஞ் சுடைய யானும்
      விடுதலைப் பயனுங் காணேன்
*தள்ளையைக் கொல்ல வந்தால்
      தலைமகன் பார்த்தா நிற்பான்?

இந்தியைப் புகுத்தி என்றன்
      இளந்தமிழ் நோகச் செய்ய
வந்திடின் நின்னை நானும்
      வாழ்த்தவா செய்வேன்? நெஞ்சம்
நொந்துழன் றழுவேன் பின்னர்
      நொடியினில் துடித்தெ ழுந்து
வெந்தழல் விழியிற் காட்டி
      விரட்டுவேன் வெருண்டு போவாய்


சிலை -கல், விரகு - தந்திரம், தள்ளை - தாய்