பக்கம் எண் :

தாய்மொழிக் காப்போம்43

18. முழங்கட்டும் போர்ப்பறை

எடுப்பு

ஆர்த்து முழங்கட்டும் *பொருநர்பறை - புகழ்
      சேர்த்து விளங்கட்டும் தமிழர்படை

- ஆர்த்து

தொடுப்பு

பார்த்துப் பகைவர்கள் வேர்த்துப் புறமிடப்
      பாட்டுப் புறம்பெறக் காட்டும் திறல்வர

- ஆர்த்து

முடிப்பு

காட்டுப் புலியெனக் காட்டும் மறவர்கள்
      காப்பர் தமிழினைச் சேர்ப்பர் புகழ்மொழி
நாட்டில் அரியணை ஏற்றி வணங்கிட
       நாட்டம் மிகுந்ததைக் காட்டும் வகையினில்

- ஆர்த்து

வேற்றுப் புலமென வேட்டை யிடவட
      நாட்டுப் புலத்தவர் வேட்டுப் புறப்படின்
தோற்றுப் பிறக்கிடத் தூக்கி எறிந்திடும்
      தோளுண் டெமக்கெனத் தோம்தோம் எனுமொலி

- ஆர்த்து

9.3.1987


* பொருநர் - போர் செய்யும் மறவர்