வானுயர்ந்த கோபுரங்கள், வளைந்து சுற்றும் மதிற்சுவர்கள், கருவறைகள், வல்லார் செய்த தேனினுயர் சுவைப்பொங்கல், கல்லால் செம்பால் செய்துவைத்த சிலைகள்பொலி கோவி லுக்குள் நானுழைந்து நெக்குருகி வணங்கி நின்று நாவசைக்க வடமொழிதான் வேண்டு மென்றால் ஏனிருந்து வாழ்கின்றேன் தமிழர் நாட்டில்? இருந்துபழி சுமப்பதிலே யாது கண்டேன்? விழிநலிவு பெறுமானால் முகமெ தற்கு? விளைபயிர்கள் கருகுமெனில் வயலெ தற்கு? வழிபுனல்தான் அறுமெனிலோர் ஆறெ தற்கு? வளர்ச்சியிலாப் பிண்டமெனில் கருவெ தற்கு? மொழியடிமை யாவதெனில் நானெ தற்கு? மூச்சில்லா உடலெதற்கு? மொழியைக் காத்துப் பழிவிலக வாழ்வதுவே வாழ்க்கை; இன்றேல் பாருக்குச் சுமைகுறையச் சாதல் மேலாம். 8.3.1987 |