54 | கவியரசர் முடியரசன் படைப்புகள் - 5 |
26. தாய்மொழிப்பற்று கன்னட மாநிலங் காணும் ஆவலால் என்னொடு சிலர்வர ஏகினேன்; ஆங்குப் பிருந்தா வனத்தின் பேரெழில் விழிக்கு விருந்தா கியது வியந்து மகிழ்ந்தேன்; கைத்திறம் வல்லார் கண்கவர் ஓவிய மெய்த்திறம் காட்டி வைத்தநற் கூடம், வண்ணக் குலமலர் வகைவகை பூத்துத் தண்ணென் றெழிலுடன் தலைநிமிர் பூங்கா, மடங்கல் உலவும் மரஞ்செறி காவுடன் நடங்கொள் மயில்திரி நலங்கெழு சோலை அடங்கலும் நோக்கி அகமிக மலர்ந்தேன்; இடம்படுந் தலைநகர் ஏற்றங் காண நகர்வலம் வந்தேன் நாற்புறத் தெழிலும் பகர்தல் அரிதே; பார்த்துக் களித்தேன்; அருகில் ஓரிசை யரங்கு நிகழ்ந்தது; உருகும் இசையால் உள்ளம் நெகிழ்ந்தது பொருள்விளங் காமற் போனது பாட்டு; மயங்குமவ் வேளை மற்றொரு பாடல் வியந்திட இசைத்தது விளங்கியது பொருளும் வெள்ளிப் பனிமலை மீதுலவு வோமெனும் தெள்ளிய பாடல் தேனென இனித்தது; கற்கள் விழுந்தன கலகம் விளைந்தது பற்பல விளக்குகள் பரவிச் சிதறின; இசையும் நின்றது; ஏனென வினவினேன்; |