பக்கம் எண் :

தாய்மொழிக் காப்போம்55

`இசைவலார் பிறமொழிப் பாடல் இசைத்தலாற்
சினந்தெழு வோரிது செய்தனர்' என்றனர்;
இனைந்துளம் வெதும்பி மொழிவெறி யென்றேன்;
தடித்த கையை மடக்கிஎன் முகத்திற்
கொடுத்தனர் குத்து, குருதி வழியச்
சிதறின பற்கள்; திடுக்கிட் டெழுந்தேன்
உதடுகள் பற்கள் உருக்கெடா திருந்தன;
தாய்மொழிப் பற்றின் தகைமை உணர்ந்து
வாயிதழ் அசைந்தன வாழிய எனவே.

13.5.1987