பேருந்து வண்டிகளிற் குறளைக் கண்டால் பேருவகை தமிழ்நெஞ்சிற் பொங்க வேண்டும்; யாரந்தக் குறளெழுத முனைந்தா ரோஇங் கெவர்மனத்துத் தோன்றியதோ என வியந்து பாரெங்கும் அவர்பெயரை வாழ்த்த வேண்டும் பைந்தமிழ்க்கு நற்காலம் வந்த தென்று; யாரிங்கு வாழ்த்துகின்றார்? பொல்லாங் கன்றோ யார்யாரோ புகல்கின்றார் பித்தர் போல; விரைந்துசெலும் உந்துகளுக் காங்கி லத்தில் வைத்திருந்த பெயர்மாற்றித் தமிழில் நன்கு வரைந்ததிருக் கைகளைநான் வாழ்த்து கின்றேன் வளர்தமிழின் வளர்ச்சியிலே விரைவு கண்டே; விரிந்தமதி யான்உரைத்தான் விரைவு வண்டி விறகுவண்டி எனச்செவியில் விழுந்த தென்றே; திரிந்தவற்குச் செவிபழுதாய் விட்ட தென்றால் செந்தமிழைப் பழிப்பதற்கா முயல வேண்டும்? எங்கெங்குக் காணினுமே தமிழ்தான் என்ற இயல்புநிலை இங்குவர வேண்டு மென்று பொங்குகிறோம்; ஓரிரண்டு நிலையி லேனும் பூத்துளதே தமிழென்று மகிழ்கின் றோம்நாம்; மங்கியவர் எள்ளிநகை யாடு கின்றார்; மல்லிகைப்பூ ‘வராகத்தால் நுகர்தல் உண்டோ? இங்கிவர்தாம் திருந்திவரும் நாள்தான் என்றோ? இனியதமிழ் இகழ்வதுவா கட்சி யாகும்?
*முன்னாள் அமைச்சர் பெயர் மறைந்துள்ளது அறிக |