பக்கம் எண் :

தாய்மொழிக் காப்போம்61

29. என்று தணியும்....?

தனக்கினிய பாயலிலே பள்ளி கொள்ளத்
      தார்புனைந்தான் மனைவிக்கே உரிமையுண்டு;
மனக்கினியாள் தவித்திருக்கப் பாயல் மீது
      மற்றொருத்தி கிடந்திடுமேல் ஒழுக்கக் கேடு;
தனக்குரிய நிலவரைப்பில் இசைய ரங்கில்
      தலைமைபெறத் தமிழுக்கே உரிமை யுண்டு;
நினைப்பினிலும் இனிக்குமொழி தவிக்க, ஏனை
      நிலத்துமொழி தலைமைபெறின் மானக் கேடு.

மானமுளான் மறத்தமிழன் என்றி ருந்தோம்
      மாறிஅவன் மரத்தமிழன் ஆகிவிட்டான்
மீனவனால் வில்லவனால் புலியன் தன்னால்
      மேம்பாடு கண்டமொழிப் பாடல் எல்லாம்
தேனமுதோ எனஇனித்தல் தெரிந்தி ருந்தும்
      தெளிவிலனாய்ப் பிறமொழியில் மயங்கு கின்றான்;
ஏனவனால் தமிழ்கேட்க இயல வில்லை?
      எத்தனைநாள் உரைத்தாலும் உறைக்க வில்லை!

மொழிஎன்றும் இனமென்றும் வேறு பாடு
      முழங்குமிசைத் துறைக்கில்லை என்று ரைத்துப்
பழிகொண்ட தமிழ்மகனே! ஒன்று சொல்வேன்
      பகர்ந்தவிதி யாவருக்கும் பொதுதான் என்றால்
பொழிகின்ற இசையரங்கில் எந்த நாட்டான்
      புகல்கின்றான் தமிழ்ப்பாட்டு? கேட்ட துண்டா?
அழிகின்ற வழிசொல்வோய்! நீதி என்றால்
      அவர்க்கொன்று நமக்கொன்றா? உணர்ந்து சொல்வாய்!