பக்கம் எண் :

62கவியரசர் முடியரசன் படைப்புகள் - 5

சரியாத தமிழ்மறவன் எங்கள் பாட்டன்
      தனிப்புலவன் பாரதிக்கு விழாவெ டுத்தாய்
புரியாத மொழிப்பாட்டைக் கேட்டுக் கேட்டுப்
      பொங்கிஅவன் நொந்துரைத்த மொழியை எல்லாம்
தெரியாது மறைத்துவிட்டாய்! தமிழை விட்டாய்!
      தேயத்தைக் காப்பவன்போல் நடிக்கக் கற்றாய்!
நரியாக உலவுகின்றாய்! நீயா இந்த
      நாட்டுக்கு நலந்தேட வல்லாய்? அந்தோ!

மடம்படுவாய்! பிறமொழிக்கே இசைய ரங்கில்
      மதிப்பளிப்பாய்! இசைபாடி முடிக்கும் போதில்
இடந்தருவாய் தமிழுக்கும்; ஒன்றி ரண்டே
      இசைத்திடுவாய் உதிரியெனப் பெயருஞ் சூட்டி;
நடந்துவரும் உண்மையிது; கேட்டுக் கேட்டு
      நைந்தமனம் தமிழ்வேண்டும் என்று சொன்னால்
அடகெடுவாய்! ஏதேதோ அலறு கின்றாய்
      அடிமைமனப் பித்தெல்லாம் தணிவ தென்றோ?

(பாரதி நினைவுநாள் கவியரங்கம்)
11.09.1976