பக்கம் எண் :

தாய்மொழிக் காப்போம்63

30. எக் காலம்

காட்டுகிற ‘டீ.வி’ யைக் கண்டன்று நீகளித்தாய்
நாட்டமுடன் ‘தூரதர்சன்’ நாடியின்று பார்க்கின்றாய்
பூட்டுந் தமிழ்ப்புலியே போற்றும் உனதுமொழி
காட்டுந் தொலைக்காட்சி காண்பதுதான் எக்காலம்?

இசையெழுப்பும் ‘ரேடியோ’ ஏற்றன்று கேட்டிருந்தாய்
வசையுடுத்த `ஆகாச வாணி'யின்று கேட்கின்றாய்
நசைவிடுத்த கோட்புலியே நம்நாட்டில் வானொலியைப்
பசியெடுத்துக் கேட்பதற்குப் பாய்வதுதான் எக்காலம்?

ஏறிப் பறந்துவரும் ‘ஏரோப்ளேன்’ அன்றிவர்ந்தாய்
மாறியது `வாயுதூத்' மற்றதிலின் றேறுகின்றாய்
தூறல் வரிப்புலியே தூக்கம் விடுத்தெழுந்து
வீறுடன்நீ வானூர்தி மேலூர்தல் எக்காலம்?

காணுங்கால் `குட்மார்னிங்' என்றன்று கையெடுத்தாய்
நாணமிலா தின்று `நமஸ்தே' மொழிகின்றாய்
ஏணம் விடுபுலியே ஈன்றெடுத்த தாய்மொழியிற்
காணும் வணக்கமெனக் கைகுவிப்ப தெக்காலம்?

8.3.1987


தூறல் - பழிச்சொல், ஏணம் - வலிமை