பக்கம் எண் :

64கவியரசர் முடியரசன் படைப்புகள் - 5

31. தமிழனா நீ?

எடுப்பு

தமிழன் எனும்பெயர் தகுமா? - உனக்குச்
சான்றோர் மொழிசெவி புகுமோ?

- தமிழன்

தொடுப்பு

சமையம் பலபல சார்ந்தனை தாழ்ந்தனை
சாற்றிடும் சடங்கினில் வீழ்ந்தனை உனக்கினி

- தமிழன்

முடிப்பு

இந்துவென் றொருமதம் இனிதெனத் தோய்ந்தனை
ஏனோ தமிழ்மொழி உணர்வினில் தேய்ந்தனை?
வந்திடும் வடமொழிப் பேர்களுக் கேங்கினை
வையக அடிமையென் றொருபழி தாங்கினை

- தமிழன்

ஆங்கொரு சிலுவை அணிந்திட ஓடினை
அதனால் ஆங்கிலப் பெயர்களே நாடினை
ஈங்கொரு இசுலாம் எனப்புகழ் பாடினை
ஏனோ அரபு மொழிப்பெயர் சூடினை?

- தமிழன்

ஒருமதம் தழுவுதல் உரிமையென் றோதலாம்
உன்தமிழ் அன்னையை எப்படி மீறலாம்?
பெரும்புகழ்த் தமிழகம் பெற்றிடும் நீயெலாம்
பிறமொழிப் பெயர்களை எப்படிச் சூடலாம்?

- தமிழன்

7.3.1987