பக்கம் எண் :

70கவியரசர் முடியரசன் படைப்புகள் - 5

34. திரும்பி விட்டேன்

`ஆறணிந்த சடைமுடியான் கூடல் தன்னில்
      ஆர்வமுடன் சுந்தரப்பேர் வழுதி யானான்;
கூறமர்ந்த பங்கினளும் மதுரை மன்னன்
      குலக்கொடியாய்த் தடாதகையாய்த் தோன்றி வந்தாள்;
வீறமர்ந்த வேலவனும் உக்கி ரப்பேர்
      மேவியங்கு வந்துதித்தான்; இவர்கள் ஈண்டுச்
சேரவந்து பிறப்பெடுக்கும் நோக்க மென்ன?
      செந்தமிழின் சுவைமாந்தி மகிழ வன்றோ?’

‘தேனிகர்க்குந் தமிழ்மொழியில் நெஞ்சி னிக்கத்
      தேவாரம் பாடியருள் மூவ ருள்ளும்
வானிடிக்கும் பொழில்சூழும் ஆரூர் வாழும்
      வடிவழகன் சுந்தரனோர் நள்ளி ருட்டில்
ஆனுயர்த்த கொடியானைத் தூத னுப்பி
      ஆட்டாத ஆட்டமெலாம் ஆட்டி வைத்தான்
*சேனிகர்த்த விழிபங்கன் தமிழை வேட்டுச்
      செய்யாத செயலெல்லாஞ் செய்து வந்தான்’.

‘நல்லறிஞர் உறைவிடமாம் தொண்டை நாட்டில்
      நாடறிந்த காஞ்சிதனில் வாழ்ந்து வந்த
நல்லவனைக் கணிகண்ணன் என்பான் றன்னை
      நாடுகடந் தேகுகென அரசன் கூறச்
செல்லுமவன் பின்தொடர்ந்தார் புலமை மிக்க
      திருமழிசை யாழ்வாரும்; கார்மே கத்தை
வெல்லுகின்ற நிறத்தானும் அவர்பின் சென்றான்
      வேட்டெழுந்த தமிழார்வ மதனால் அன்றோ!’


*சேல் + நிகர்த்த