பக்கம் எண் :

தாய்மொழிக் காப்போம்71

‘தூண்டாமல் தோன்றுசுடர்க் காதல் கொண்டு
      சூடிமலர் கொடுத்தாளைப் பாவால் நம்மை
ஆண்டாளை ஆண்டானை, நினைந்த ரற்றி
      அருட்கடலில் ஆழ்வார்தம் ஆயி ரங்கள்
பூண்டானை, அவர்திருவாய் மொழியைக் கேட்டுப்
      புவியிடத்து மாலாகி நின்றான் தன்னை,
வேண்டானெந் தமிழ்மொழியை என்று ரைத்தால்
      வெறுமதியர் என்பதலால் வெறென் சொல்வோம்?’

‘கடவுளர்கள் உகந்தமொழி, என்புக் கூட்டைக்
      காரிகையாக் கண்டமொழி, மறைக்காட் டூரில்
அடைகதவந் திறந்த மொழி, முதலை யுண்ட
      ஆண்மகவை மீட்டமொழி, தெய்வப் பான்மை
படருமொழி, பத்திமொழி, தொடுக்குந் தெய்வப்
      பழம்பாடல் நிறைந்தமொழி, உள்ள மெல்லாம்
மடைதிறந்த வெள்ளமென அருளைப் பாய்ச்சி
      மகிழ்விக்கும் அன்புமொழி தமிழே யன்றோ!'

என்றுரைத்த சொன்மாரி செவியு ளோடி
      என்மனத்தை நெக்குருக்க இளகி ஆண்டு
நின்றிருக்கும் நான்மகிழ்ந்தேன்; எதிரில் தோன்றும்
      நெடுங்கோவி லுட்புகுந்தேன்; அருளால்நெஞ்சம்
ஒன்றிநிற்கும் பன்னிருவர் நால்வர் மற்றோர்
      ஓதிவைத்த பாடலெலாம் உன்னி யுன்னிச்
சென்றிருந்தேன்; திடுக்கிட்டேன்; சிந்தை நொந்தேன்;
      செந்தமிழைக் காணவிலை திரும்பி விட்டேன்.