74 | கவியரசர் முடியரசன் படைப்புகள் - 5 |
37. ஐக்கூ அடிமை அரும்பிய கருத்தை அழகிய முறையிற் சுருங்கிய அடிகளிற் சொல்லுதல் வேண்டின் திருந்திய தமிழிற் சிலவகை யுண்டு, முன்னிய கருத்தை மூன்றடிக் குள்ளே பன்னும் பாவகை பைந்தமிழ் காட்டும் முந்தை இலக்கணம் மொழிந்த சான்றோர் சிந்தியல் வெண்பா என்றதைச் செப்புவர்; ஈரடிப் பாடல் இயம்பலும் உண்டு பேரது யாதெனிற் குறளெனப் பேசுவர்; ஓரடி கூட உள்ளக் கருத்தை நேரடி யாக நிகழ்த்தலும் உண்டு கொன்றை வேந்தன் என்றதைக் கூறுவர்; அரையடிப் பாடலும் அருந்தமிழ் காட்டும் ஆத்தி சூடியென் றதன்பேர் உரைப்பர்; ஏத்தும் இவையெலாம் தமிழில் இருக்கச் சீர்த்த தமிழைச் சிந்தையிற் கொளாது எங்கோ அலைகிறாய் ஐக்கூ என்கிறாய் இங்கே இருப்பதை எண்ணாது தாய்மொழிக் கின்னல் விளைக்க எண்ணித் திரியும் உன்னை அடிமையென் றுரைப்பதே சாலும் கைப்பொருள் இருக்கக் கடன்பெற அலையும் பைத்தியம் உலகிற் பார்த்ததும் இலையே! 26.10.1990 |