38. அதன் பெயர் என்ன? பிறந்தவர் அனைவரும் மனிதர் - ஆனால் பிரிவுகள் அவருளும் உண்டு சிறந்தவர் எனச் சிலர் வாழ்வர் - சீர் குறைந்தவர் எனச்சிலர் தாழ்வர். கனிபவை யாவுங் கனிகள் - ஆனால் கழிப்பன அவற்றுளும் உண்டு இனியன எனச் சில கொள்வார்- சுவை இல்லன எனச்சில கொள்ளார். காய்ப்பன யாவுங் காய்கள் - ஆனால் கறிக்குத வாதன வுண்டு பேய்ச்சுரை கொள்பவர் உண்டோ - அந்தப் பேதைமை எவரிடங் கண்டோம்? பிறப்பன யாவுங் குழந்தை - என்று பேசுவ தெப்படிப் பொருந்தும்? உறுப்புகள் உடம்பினில் இன்றிப் - பிறந்தால் உண்மையில் அதன்பெயர் என்ன? எழுதிய வெல்லாங் கவிதை - என்றால் எங்ஙனம் ஒப்புவ ததனை? பழுதுகள் அடைந்தன உறுப்பு - பின்னும் பாவெனச் சொல்வதா சிறப்பு? |