76 | கவியரசர் முடியரசன் படைப்புகள் - 5 |
39. கற்றோரை வேண்டுகிறேன் அறிவியல் கற்று வந்தீர் அளவிலா உவகை கொண்டேன்; பொறியியல் தேர்ந்து வந்தீர் பூரித்து மகிழ்வு பெற்றேன்; பொருளியல் துறையில் தேர்ந்தீர் புகழ்ந்தனர் அயல்நாட் டாரும்; இருளினில் மூழ்கி நின்ற இனத்திலோர் ஒளியைக் கண்டேன். மருத்துவத் துறையுங் கற்றீர் மருந்தியல் நெறியும் பெற்றீர் பெருத்தநும் அறிவால் நாட்டில் பெரும்புகழ் குவித்தீர் மேலும் *அருத்தியால் உம்மை வேண்டி அழைத்தனர் வெளிநாட் டாரும்; கருத்தினுள் எழுச்சி கொண்டேன் காய்நிலஞ் செழித்த தென்றே! உயிரியல் தோய்ந்து கற்றீர் உடலியல் ஆய்ந்து கற்றீர் பயிரியல் செழிக்கக் கற்றீர் பலவகை நிலநூல் என்னும் *அயிரியல் அதுவும் கற்றீர் ஆதலின் உலகம் போற்றும் பயன்பல விளையும் என்றே பகலெலாம் கனவு கண்டேன்
*அருத்தி - அன்பு *அயிரியல் - நுண்ணியல் |