தமிழுக் குயர்நிலை தரல்அதன் கடமை; பட்டயம் எனுமொரு பழம்பெயர் மாற்றிப் பட்டம் என்றொரு சட்டம் செய்தால் உலகம் குப்புற உருண்டா வீழும்? அலைகடல் பொங்கி ஆர்த்தா சீறும்? பட்டமென் றாக்கிடின் பலப்பல சிக்கல் பொட்டெனப் போகும்; போற்றிடுந் தமிழகம்; அரசு கட்டில் அமர்ந்தினி தாளும் கலைஞர் நாவலர் கருதுவீ ராயின் இலையொரு தடையும் எம்தமிழ் மொழிக்கே; இன்றுள அரசு நன்றிது செயாவிடின் என்றுதான் விடியும் எந்தமிழ் வாழ்வு? தம்மை யீன்ற தாய்த்திரு நாட்டைச் செம்மைத் தமிழால் செப்பிட மறுத்தவர் பழிக்கவும் இழிக்கவும் பட்டனர் அன்றோ? மொழிக்குயர்ஆக்கம் முனைந்து தராவிடின் நாளைய உலகம் நம்மையும் பழிக்கும்; வேளை யிதுதான் விரைந்திது புரிக! செய்யத் தகுவ செய்யாவிடினும் எய்துவ தியாதெனத் தெரிந்து செயல்செயும் நுண்மாண் நுழைபுலம் உடையீர் நண்பால் வேண்டுதும் நலம்தமிழ் பெறவே. 30.11.1974
(கலைஞர், நாவலர் - கலைஞர் மு. கருணாநிதியும், நாவலர்.இரா. நெடுஞ்செழியனும்) |