பக்கம் எண் :

80கவியரசர் முடியரசன் படைப்புகள் - 5

41. தமிழ்ச் சான்றோரைப் போற்றுக!

தாய்மொழியைப் பாராட்ட விழையும் மாந்தர்
      தம்மொழியிற் சான்றோரைப் போற்றல் வேண்டும்
தாய்நாட்டு முதலமைச்சர் மாலை சூட்டத்
      தகுகல்விப் பொறுப்பேற்ற அமைச்சர் நின்று
வாய்விட்டுப் பாராட்ட நிதிய மைச்சர்
      வரையாது மனங்குளிர்ந்து பரிசில் நல்கச்
*சேய்நாட்டார் வியந்துரைக்க யானை மீது
      செம்மாந்து செலல்வேண்டும் அந்தச் சான்றோர்.

செம்மாந்து செல்கின்ற காட்சி காணச்
      சேர்ந்தோடி வருகின்ற மக்கள் கூட்டம்
அம்மாஎன் றதிசயிக்க வேண்டும் என்றன்
      ஆவல்நிறை வேறுகின்ற நாள்தான் என்றோ?
இம்மாநி லத்திருக்கும் புலவர் என்போர்
      எல்லாரும் ஒன்றாகி எழுந்தால் உண்டு;
சும்மாஇங் கிருந்ததெலாம் போதும் போதும்
      சூளுரைத்து நாமெழுதல் வேண்டும் வேண்டும்.


(*சேய் நாட்டார் - தூர நாட்டவர்)