பக்கம் எண் :

தாய்மொழிக் காப்போம்83

கோடையிலே இளைப்பாற்றிக் கொள்ளும் நல்ல
      குளிர்தருவாய். தருநிழலாய், நெஞ்ச மென்னும்
மேடையிலே வீசுகின்ற தென்றற் காற்றாய்,
      மென்காற்றின் விளைசுகமாய் கருணை என்னும்
ஓடையிலே ஊறிவரும் தெண்ணீராகி
      உகந்தமண மலராகி, சிறுவ னாக
ஆடையிலே எனைமணந்தஇராம லிங்க
      அடிகளவர் உளங்கவர்ந்த வள்ள லாவர்.

பாமரராய் விலங்குகளாய்ப் பான்மை கெட்டுப்
      பகுத்தறிவும் அற்றவராய்ப் பிறந்த நாட்டைப்
பூமிதனில் அயலவர்க்கே அடிமை யாக்கிப்
      புழுவினைப்போல் பூச்சியைப்போல் கிடந்தநாளில்
தேமதுரத் தமிழ்ப்பாட்டால் புரட்சித் தீயைத்
      திசையெல்லாம் மூட்டியவன், உரிமை எல்லாம்
நாமடைய வேண்டுமென்ற உணர்வு தந்த
      நற்கவிஞன் எனதுள்ளம் கொள்ளை கொண்டான்;

தென்னாட்டின் விடுதலைக்கே வாழ்வு தந்தோன்;
      தீந்தமிழின் உரிமைக்கே பாடல் தந்தோன்;
இந்நாட்டில் பிறமொழிகள் படையெ டுத்தால்
      எழுந்தார்க்கும் பாவேந்தன், எதிரி கோடிப்
பொன்காட்டி யழைத்தாலும் இகழ்ந்து தள்ளிப்
      புகழ்மிக்க தமிழினத்தின் மேன்மை காக்கத்
தன்பாட்டைப் படைத்தளித்தோன் என்றும் மாறாத்
      தன்மான இயக்கத்தான், உளங்க வர்ந்தான்;