பக்கம் எண் :

86கவியரசர் முடியரசன் படைப்புகள் - 5

44. புரட்சிப் பாவலன்

ஒப்பரிய யாப்பென்னும் அணையைக் கட்டி
      உணர்ச்சியெனும் பெரும்புனலைத் தேக்கி வைத்தான்;
அப்புனலுள் மூழ்கியதன் ஆழங் காணல்
      அரிதெனினும் கரையோரம் நின்று கொண்டு
செப்புகின்றேன் சிலமொழிகள்; புதிய பாங்கில்
      செய்தமைத்த பாட்டுக்குள் வெறியை ஏற்றும்
அப்பனவன் பரம்பரையில் நானோர் பிள்ளை
      ஆதலினால் அவன்பெருமை பாடு கின்றேன்.

பாவேந்தன் தீப்பிழம்பின் வெம்மை சேர்த்துப்
      படைத்தளித்த தீந்தமிழின் உணர்ச்சிப் பாட்டை
நாவேந்திப் பாடிவிடின் உடலி லுள்ள
      நரம்பனைத்தும் முறுக்கேறும்; மொழிக ளெல்லாம்
*ஏவேந்திப் போர்தொடுக்கும்; விழிக ளெல்லாம்
      எரிகக்கும்; தோள்விம்மும்; போரில் எந்தக்
கோவேந்தன் வந்தாலும் எதிர்த்து நிற்கக்
      கொடுங்கோலைப் புறங்காண உணர்ச்சி நல்கும்

விழுதுவிட்ட ஆலமரம் சாதி என்றால்
      வேர்பறியச் சாய்ந்துவிழச் செய்த பாட்டு;
பழுதுபட்ட கண்மூடிக் கொள்கை என்னும்
      பழங்கோட்டை சரிந்துவிழச் செய்த பாட்டு;
தொழுதுகெட்ட தமிழினத்தார் நிமிர்ந்து நிற்கத்
      துணிவுதனை உணர்ச்சிதனைத் தந்த பாட்டு;
பொழுதுபட்டுப் போனாலும் உணர்ச்சி பட்டுப்
      போகாமல் நிலைத்திருக்கும் புலவன் பாட்டு.


*ஏவேந்தி - அம்பேந்தி