தமிழ்மொழியைத் தமிழ்மகனைப் பழித்து ரைக்கும் தருக்குடையார் முதுகெலும்பை நொறுக்கிக் காட்டும் அமிழ்தனைய பாட்டுரைத்தான்; சினந்தெ ழுங்கால் அன்னைவந்து தடுத்தாலும் விடவே மாட்டேன் நிமிர்ந்தெழுந்து போர்தொடுப்பேன் எனவெ குண்டு, நினைத்தாலும் மெய்சிலிர்க்கும் பாட்டு ரைத்தான்; இமைகுவியா வீரத்தை எடுத்துக் காட்டி எக்களிக்கும் போர்ப்பாட்டை நமக்க ளித்தான். இருட்டறையில் உள்ளதடா உலகம் என்றான்; இனிவுலகம் விழித்தெழவே அவ்விருட்டை வெருட்டுகிற வழிசொன்னான்; ஒளியுந் தந்தான்; விளக்கெடுத்து வெளிச்சத்தால் உலகைக் காணத் தெருட்டுகிற பாட்டுரைத்தான்; அந்தப் பாட்டைத் தெளிந்துணர மனமின்றிப் பாட்டிற் காணும் கருத்தெடுத்துப் பரப்புதற்கு முயற்சி யின்றிக் கண்மூடித் துயில்கின்றோம் உணர்வே இன்றி. மழைபெய்தும் விளைவறியாக் களிமண் ணாக வன்பாறை நிலமாகக் கிடக்கின் றோம்நாம்; கழைபெய்த சாறிருந்தும் அதனை மாந்திக் களிக்காமல் எதைஎதையோ பருகு கின்றோம்; விழைவெல்லாம், பாவேந்தன் எண்ண மெல்லாம் வெறுங்கனவாய்ப் பகற்கனவாய்ப் போவ தென்றால் நுழைமதியன் பாவேந்தன் தனது நெஞ்சம் நொந்தழிந்து போகானோ? நன்றே சொல்வீர். |