பக்கம் எண் :

90கவியரசர் முடியரசன் படைப்புகள் - 5

45. ஞாயிறு போற்றுதும்

தென்பால் உளது, தேன்வளர் சாரல்
மென்கால் உலவும் திண்கால் ஆரம்
குதிதரும் அருவி மருவிய மாமலை
மதியந் தவழும் பொதியம் ஒன்று;
வடபால் உளது, வானுயர் கொடுமுடி
தொடருங் கருமுகில் படருஞ் சாரல்
உறைதருந் தண்பனி நிறைதரும் மாமலை
பரிதியை மறைக்கும் பனிமலை ஒன்று;
பெருமலை இரண்டும் ஒருமலை யாக்கக்
கருதிய ஒருசிலர் உறைபனி கொணர்ந்து
தென்றல் தவழும் குன்றின் தலையில்
அன்றவர் வைத்தனர்; அடடா என்றனர்;
பனியால் நடுக்குறும் பயனே கண்டனம்;
இனிய தென்றலும் எழில்நலங் குறைந்தது;
விடுத்தஅப் பனிதான் விரைந்திவண் விலக
நடுக்கிய பனியின் நலிவும் அகல
ஒரு நூற்றாண்டின் முன்னர் ஒருநாள்
மறைமலை என்னும் மறுபெயர் பூண்டு
கடலலை மோதும் கரைபெறும் மூதூர்
இடமகல் நாகை எனும்பெயர்ப் பட்டினத்
தெழுந்ததோர் ஞாயிறு கரைந்தது வெண்பனி;
தொழுதனர் மாந்தர் தோன்றுசெங் கதிரை;


மென்கால் - தென்றல், ஆரம் - சந்தனமரம்