காணத் துடிக்கின்றேன்; காளையரே முன்போலப் பேணிச் செயல்செய்யப் பேருள்ளங் கொள்ளீரோ? நாட்டை நினையுங்கள்! நாடாண்ட நம்மினத்தின் பாட்டை நினையுங்கள் பைந்தமிழை எண்ணுங்கள்! வீட்டின் தனிநலத்தைச் சற்றே விலக்கிவைத்து நாட்டின் பொதுநலத்தை நாடுங்கள்! நாடிவிடின் நானென்ற சொல்மறையும் நாமென்ற சொல்மலரும்; ஏனென்றால் தொண்டுக் கிலக்கணம் ஈதேதான்; அண்ணன் திருநாளில் அத்தலைவன் சொன்னவற்றை எண்ணி நடந்திடவே இன்றும்மை வேண்டுகிறேன்; நேற்றை வரலாற்றை நெஞ்சில் நிறுத்துங்கள்! ஏற்றை நிகர்வலியீர் இன்று நடப்பதையும் சிந்தித் தெதிர்நிறுத்திச் சீர்தூக்கி நோக்குங்கள்! வந்த இடரெல்லாம் வாயடங்கிப் போயொழியும்; நாளை எதிர்காலம் நன்றாக வேண்டுமென்றே காளையருக் கிந்தக் கருத்தை மொழிகின்றேன்; என்னைத் தவறாக எண்ணி எடைபோட்டுப் பின்னக் கணக்கைப் பிழையாகப் போடாதீர்! கூடாரங் கூடார மாகக் குடிபுகுந்து சூடாத பூக்கெய்து சூடிப் பழிசுமந்து மானந் தனையிழந்து மற்றவர்தம் தாள்பிடித்துக் கூனல் மனத்தோனாய்க் கொள்கையை விற்றதிலை; நேற்றொன்று கூறி நிலைநாட்டி இன்றதனை மாற்றி யுரைக்கும் மதிசிறிதும் பெற்றதிலை; அன்றுநான் சொன்னதையே இன்றும் மொழிகின்றேன் என்றுமதே சொல்வேன் இனிமேலா மாறிடுவேன்? ஏற்றுங் கொடிதான் இருவண்ணம் என்னெஞ்சில் ஏற்றும் எழில்வண்ணம் என்றும் ஒருவண்ணம்; கொச்சை மொழிபேசிக் கூட்டம் மிகச்சேர்த்துப் பச்சைப் புளுகால் பலபேரை ஏமாற்றிக் |