112 | கவியரசர் முடியரசன் படைப்புகள் - 6 |
கச்சேந்தும் மாதர் கலவிக் கதைகூறிப் பச்சோந்தி போலப் பலவண்ணங் காட்டேன் நான்; மெச்சும் மொழிபேசி மேன்மைக் கருத்துரைத் தச்சம் சிறிதுமின்றி அல்லல் எதுவரினும் துச்சம் எனமதித்துத் தொண்டுசெயத் தன்மானக் கச்சைகட்டி நிற்கும் கடப்பா டுடையவன்நான்; ஈரோட்டு வேந்தர் எடுத்த இனவெழுச்சிப் போராட்டப் பாசறைக்குட் போய்ப்புகுந்த நாள்முதலே நீர்க்கோல வாழ்வில் நெடிதே துயருறினும் போர்க்கோலம் மாறவிலை புத்திடு மாறவில்லை; கோட்டுக்குள் கோடு குதிக்கும் கவியாகி நாட்டைக் கெடுக்கும் நயவஞ்சங் கொண்டதிலை; கேட்டுக்குக் கேடு கிளர்ந்தெழுந்து தாக்கிடினும் நாட்டை யுருவாக்க நாளும் நினைப்பவன் நான்; பாடென்ன பட்டாலும் பண்பாட்டை எந்நாளும் பாடுபட்டுக் காக்கப் பழகி நடப்பவன்நான்; சங்கமெனுந் தோட்டத்தில் சாற்றுச் சுவைமிகுந்து தொங்குங் கவிப்பழங்கள் துய்த்துப் பழக்கமுண்டு யாப்பமைந்த பாடல் இயற்றித் தருவதற்குக் கோப்பைப் பழங்கள் குடித்துப் பழகவில்லை; சாதிச் சழக்ககலச் சாத்திரத்துச் சூழ்ச்சிகளை மோதித் தகர்த்தெறிய முன்னேற்றம் பெற்றிலங்கக் கட்டாயம் வேண்டும் கலப்புமணம் என்றதுண்டு தட்டாமல் அவ்வாறே சாதி தனைத்தொலைத்தேன்; சாதிக் கலப்பைத்தான் சாற்றி நடந்ததன்றி ஓதும் மொழிக்கலப்பை ஓர்நாளும் சொன்னதிலை; செந்தமிழில் வந்தமொழி சேர்ந்தால் இனிக்குமெனச் சந்தைமொழி பேசும் சழக்கனென ஆகவில்லை; பாட்டுத் தொழிலுடையேன் பண்பாட்டுச் செந்தமிழை நாட்டுந் தொழிலுடையேன் நாட்டை யுருவாக்க |