பக்கம் எண் :

வள்ளுவர் கோட்டம்113

வேட்டுத் தொழில்புரிவேன் வேட்டுவைத்து நானறியேன்
வீட்டை நினைந்தறியேன் வெந்துயரம் உற்றாலும்
ஒன்றே வழியென்பேன் ஒன்றே மொழியென்பேன்
நன்றே நினைந்து நடக்கின்றேன்; ஆதலினால்
ஓங்கும் விளம்பரங்கள், உற்ற துணைபுரிந்து
தாங்குந் திருக்கைகள், தாங்காத் துயரகற்றிக்
காக்குந் திருவுளங்கள் கண்டதிலை இன்றுவரை;
ஏக்கம் அதனாலே எள்ளளவும் கொண்டதிலை;
நாட்டின் நலம்நினைந்து நல்ல கனவுலகில்
பாட்டுப் பறவையெனப் பாடி வருபவனை
வீட்டுத் துயர்வந்தா வீழ்த்திவிடும்? வீழ்ந்துவிடின்
பேட்டுத் தனமாகும் பிள்ளைச் செயலாகும்;
ஆதலினால் நம்கழகம் அல்லற் படும்போது
வேதனை கொள்கிnறேன் வேதனையை நீக்கிடுவீர்!
காலைக் கதிரவனைக் கார்முகில் சூழ்ந்துளது
வேலைத் திறமையுடன் வீசுங்கள்! முன்போலப்
பொங்கும் இனவுணர்ச்சி பொங்கட்டும்! அவ்வுணர்ச்சி
எங்கும் பரவி எழுந்துபுயல் ஆகட்டும்!
வீசுபுயல் வேகத்தால் மேகங்கள் ஓடட்டும்!
தேசுபெறும் செங்கதிரோன் செய்யஒளி வீசட்டும்!
வீறுநடை போடுங்கள் வெற்றிமலர் சூடுங்கள்!
கூறுகிறேன் என்கை குவித்து.

தமிழ்நாடு அரசு அண்ணா விழா,
கலைவாணர் அரங்கம்,
சென்னை.
15.9.1977