ஆய்ந்துணர மாட்டா தறியாமைப் பேரிருளில் தோய்ந்து கிடந்தோர் தொடுத்தெறிந்த கல்லெல்லாம் சேர்ந்து திரண்டு சிலையாக வந்தின்று நேர்ந்திங்கு நிற்பதுபோல் நெஞ்சம் நினைக்கிறது; கல்லுக்கும் சொல்லுக்கும் காட்டும் எதிர்ப்புக்கும் தொல்லைக்கும் அஞ்சாது தொண்டுசெயும் அந்நாளில் ஆரியரின் கால்வருடும் அன்பர் திருக்கூட்டம் சீறிவரும் நாகமெனச் சேர்ந்து பெரியார்மேல் வீசி எறிந்தபொருள் வீசைப் பொருளாகிக் காசு பணமாகக் காண்கின்றேன் இந்நாளில்; பேராசைக் காரர் பெரியார் எனச்சொல்ல ஓராசை என்மனத்தே ஓடிச் சுழல்கிறது; தம்வயது தொண்ணூற்றைத் தாண்டிவிட்ட பின்புமவர் தம்வயது நீண்டுவரத் தாம்ஆசை கொள்கின்றார்; ஏனிந்த ஆசைஎனில் ‘இன்னும்பல் முன்னேற்றம் நானிங்குச் செய்வதற்கு நாடுகின்றேன்’ என்கின்றார்; நம்மினத்தை ஈடேற்ற நாடுகின்ற ஆசை எனில் எம்முயிர்க்கு வைத்தநாள் எல்லாம் அவர்க்கீவோம் பல்லாண்டு பல்லாண்டு பல்லா யிரத்தாண்டு நல்லாண்டு பெற்றிலங்க நாமெல்லாம் வாழ்த்திடுவோம்; தந்தை மகற்காற்றும் நன்றி அவையத்து முந்தி யிருப்பச் செயலென்ற முன்மொழியால் தாம்பெற்ற தி.மு.க. தாயகத்துப் பேரவையில் ஓங்குற்று மேன்மைபெற உண்டாக்கி விட்டமையால் தந்தை செயும்பணியைத் தாழ்வின்றிச் செய்துவிட்டார் அந்தப் பெருமகனை அய்யாவை வாழ்த்திடுவோம் தேயத்தில் கட்சிபல சேர்ந்து வளர்வதுண்டு நேயம் வளர்க்கின்ற நேர்த்தியைநாம் பார்த்ததுண்டா? ஐயா எனஉறவு சொல்லி அழைப்பதற்கு மெய்யாக ஓர்தலைவர் மேதினியிற் கண்டதுண்டா? அண்ணா அண்ணாவென் றழைக்கின்ற அன்புமொழி எந்நாளில் எக்கட்சி எங்கே உரைத்ததுண்டு? |