116 | கவியரசர் முடியரசன் படைப்புகள் - 6 |
வீட்டுக் குடும்பம்போல் வேண்டிப் பழகுகின்ற நாட்டுக் குடும்பமென நம்கழகம் வாழ்வதற்குக் கற்பித்த நம்ஆசான் காட்டும் நெறிநடக்க முற்பட்டு நின்றால்நாம் முன்னேற்றம் பெற்றிடுவோம்; முன்னேற்றம் நாம்பெற்றால் மூத்திருக்கும் இக்கிழவர் இந்நூற்றைத் தாண்டி இனிதிருந்து வாழ்ந்திடுவார்; தொண்ணூறு தாண்டி விடின் தொண்டுகிழம் என்றுரைப்பார் தொண்ணூறு தாண்டிடினும் தொண்டுக் கிழவரிவர்; இவ்வுலகை மாயமென ஏய்க்கும் மதச்சழக்கை வெவ்வுரையால் சுட்டெரிக்கும் வெந்தழல்தான் நம்பெரியார்; எம்மதமும் அண்டா நெருப்பிவர்தாம் என்றாலும் அம்மா மதத்தலைவர் அண்டும் மதித்தலைவர் திட்டப்படும் புலவர் சிந்தையது நோவாமல் ஒட்டிப் பழகும் உரிமைத் தலைவரிவர்; வாளெடுப்போம் நம்பகையை வாட்டிடுவோம் என்றுபல நாளெடுத்துக் கூறிடினும் நம்பகையால் வந்தவர்க்குக் கேடொன்றும் சூழாக் கிழவரிவர்; நெஞ்சத்தில் சூடொன்றப் பேசிடினும் தோழமைக்குத் தந்தையிவர்; வன்முறைகள் நாடா வலியரிவர்; தம் கருத்தைச் சொன்முறையால் நற்புரட்சி தோற்றுவித்த வீரரிவர்; பார்போற்றும் வண்ணம் பகுத்தறிவுக் கல்லூரிச் சீர்போற்றி நின்றிலங்கச் செய்யும் முதல்வரிவர்; தென்னாட்டை மீட்கத் திறல்காட்டி நம்பகைவர் *வெந்காட்டி ஓடச்செய் வெண்தாடி வேந்தரிவர்; இந்தி எனும்பெயரால் இங்குவரும் ஆதிக்கம் முந்தித் தொலைத்துவிட மூட்டும் பெருநெருப்பு; தங்கமுடி யாமல் ததும்பிவரும் சிந்தனைகள் பொங்கி வழிகின்ற புத்தறிவுப் பேருற்று; சாதி சமயங்கள் சாத்திரங்கள் என்றுபல ஓதும் மடமை உடைக்கும் வெடிமருந்து; நல்ல குடியரசும் நாடும் விடுதலையும்
**.வெந்காட்டி - புறமுதுகு காட்டி |