வாதங்கள் பலபுரிந்தார் வெற்றி கண்டார் வளரறிவுச் சுடரொளியைத் தூண்டிவிட்டார் பேதங்கள் பேதைமைகள் தொலைப்ப தற்குப் பெரும்போர்கள் நடத்திநமைக் காத்த வீரர். புலவர்தமைப் பொய்ந்நூலைச் சாடி னாலும் புலவரெலாம் இவர்பக்கம்; பிளவு பொய்ம்மை மலிசமயக் கொள்கைகளை எதிர்த்த போதும் மதத்தலைவர் இவர்பக்கம்; கடவுட் பொம்மை கலகலக்க உடைத்தெறிந்த போதும் அந்தக் கடவுளரும் இவர்பக்கம்; ஆரி யத்தை அலறவைக்கப் போர்தொடுத்து நின்ற போதும் ஆச்சாரி யாருமிவர் நண்பர் ஆனார். சமயத்தின் பொய்ம்மைஎலாம் தொகுத்து வைத்துச் சமுதாயச் சீர்கேட்டைச் சிந்தித் தாய்ந்தே இமயத்தின் மேல்நின்று மக்கள் முன்னர் எடுத்துரைத்த வாதங்கள் கொள்கை எல்லாம் உமியொத்த மனத்தவரைத் தவிர மற்றோர் உண்மைஎனத் தெளிந்ததனால் பகைமை யின்றித் தமையொத்த ஐயாவின் பக்கம் நின்றார் தந்நலத்தை நாடாத ஐயா வென்றார். தீண்டாமை ஒழிப்புப்போர் நடத்திக் காட்டித் தீமைகளை முறியடித்த வைக்கம் வீரர் வேண்டாத பெண்ணடிமை தொலைப்ப தற்கும் வீழ்ந்துவிட்ட தமிழினத்தின் விடுத லைக்கும் ஈண்டையா போர்நடத்தி வெற்றி கண்டார்; ஈங்கின்றிப் பிறநாட்டிற் பிறந்தி ருந்தால் ஆண்டுள்ளோர் ஆபிரகாம் லிங்கன் என்பார் அறிவுரைத்த சாக்கரடீ சென்று ரைப்பார். |