பக்கம் எண் :

வள்ளுவர் கோட்டம்133

6
இனத் தலைவர்

பெரியாரை நினையாத தமிழன் இல்லை
       பேசாத புகழாத நாவும் இல்லை;
மரியாதை தமிழனுக்கு வாய்த்த தென்றால்
       மாமேதை பெரியாரின் தொண்டே யன்றோ?
சரியாத அப்பெரியர் வாழ்நாள் எல்லாம்
       சலியாது தளராது முயலா விட்டால்
நரியாரின் சூழ்ச்சிக்குள் தமிழி னத்தார்
       நசுக்குண்டு விழிபிதுங்கி அழிந்து தீர்வர்.

‘மங்காத புகழ்படைத்த தமிழி னத்தான்
       மாற்றானுக் கடிவருடி யாகி விட்டான்
இங்காளும் உரிமையினை அவனுக் கீவேன்
       எதிர்த்துவரும் எப்பகையும் துணிந்து சாய்ப்பேன்
*வெங்காயம் தளர்ந்தாலும் ஓய மாட்டேன்
       வென்றிடுவேன்’ என்றெழுந்த பெரியார் போல
இங்காரும் உழைத்ததில்லை வீரம் மிக்க
       இனவெழுச்சி வரலாற்றுத் தலைவர் ஆவார்.


*வெங்காயம் - விரும்பத் தக்க உடம்பு