பக்கம் எண் :

வள்ளுவர் கோட்டம்143

14
பகலோன் வாழ்க

பகலோன் வாழ்க பகலோன் வாழ்க
பகுத்தறி வுக்கதிர் பாய்ச்சி விளக்கிடும்

- பகலோன்

புகுமிருள் கலங்கிடப் புத்தொளி துலங்கிடப்
புன்மைகள் தொலைந்திடப் பொருள்களை விளக்கிடும்

- பகலோன்

பொய்யெது மெய்யெது புரியா திருந்தோம்
பொருளெது மருளெது கருதா திருந்தோம்
அயலெது நமதெது தெரியா திருந்தோம்
அறிவொடு விழிகளை அழகுற மலர்த்திய

- பகலோன்

கற்பனைக் கூண்டினுள் கண்ணயர்ந் திருந்தோம்
கலகல ஒலியொடு சிறகடித் தெழுந்தோம்
பற்பல பணிகளில் பரிவுடன் புகுந்தோம்
பழுதறத் துயிலெழப் புதுமுறுக் கேற்றிய

- பகலோன்

22.6.79