பக்கம் எண் :

வள்ளுவர் கோட்டம்155

போர்க்கோலம் பூணுங்கள் போற்றுங்கள் தாய்மொழியை
யார்க்கும் அடிமையலோம் ஆளப் பிறந்தவர்நாம்
கொன்று குவித்தாலும் கூட்டில் அடைத்தாலும்
நின்றமரில் தோளை நிமிர்த்துங்கள்’ என்றெல்லாம்
ஆர்ப்பாட்டப் *போர்ப்பாட்டை அண்ணன் முழங்கிஒரு
போர்ப்பாட்டைக் கண்டு புறங்கண்டார் இந்தியினை;
செந்தமிழ் நாடாளச் செங்கோல் தனையேந்த
வந்ததும் நம்தமிழ் வாழ வழிசெய்தார்;
எம்முடைய நாட்டில் இரு மொழி போதுமென
மும்மொழிக் கொள்கை முறிய வழிசெய்தார்;
செந்தமிழைக்காத்து சிறந்த தலைமகனைப்
பைந்தமிழிற் பாடிப் பரவுவதே நம்கடமை
நாம்வாழ வந்தவனை நல்லவனை வாழ்த்திடுவோம்
தேன்பாயும் தீந்தமிழைச் சேர்த்து.


* போர்ப்பாட்டை - போர் நெறி