தலைக்கனத்தை அவனிடத்துக் கண்ட தில்லை தன்னடக்க நெறிகாட்டி உயர்ந்து நின்றான். கிழமைமிகு பெரியாரின் கழகம் சேர்ந்து கிளைத்துயர உழைத்தான்பின் பிரிந்த போதும் கழகமதை அழித்துவிடக் கருத வில்லை; கண்டபடி ஏசவில்லை; ஈதி ரட்டைக் குழல்மருவு துப்பாக்கி என்றே சொன்னான் குணமென்னுங் குன்றேறி நின்றா னன்றோ? அழகுமிகு முன்னேற்றக் கழகங் கண்டான் ஆர்ப்பரிப்புச் செய்யவில்லை பணியே செய்தான். உடனிருந்து வளர்ந்தோர்தாம் பிரிந்து சென்றே உளம்நோகப் பழித்தாலும் பழிக்க மாட்டான்; இடுபழியே தொழிலாகக் கொண்டு வாழ்வோர் இன்னாமை செய்தாலும் அவர்தாம் நாண இடனறிந்து புகழ்ந்துரைப்பான் அதனால் அந்த எதிரிகளும் மனந்திரிந்து மதிக்க லானார்; கடமையினைப் புரிந்திருந்தான் கட்டுப் பாட்டைக் காத்திருந்தான் கண்ணியமாம் வாழ்வும் பெற்றான். |