பூவேந்தும் நம்அண்ணா தமிழ்மொ ழிக்குப் பொலிவுதரும் அரணாணார் தமிழி னத்தார் தாழ்வேந்திப் போகாமல் காத்து நிற்கும் சரித்திரத்தின் பேரரணாய் விளங்கு கின்றார். தனித்தனியே பிரிந்தவர்க்கும் கூடு நர்க்கும் தலைமகனாம் இம்மன்னன் காத லூட்டிக் கனிச்சுவையை விஞ்சுதமிழ் அமுதம் பெய்து களிப்பூட்டும் நிறைமதியன் ஆவான் கண்டீர்; அனிச்சமலர் மென்மையினை மனத்திற் கொண்ட அம்மதியை *ஓரிரவிற் கண்டாற் போதும் தனிச்சுவடு பதித்தமையை உணர்ந்து கொள்வர் தமதுள்ளம் உடலுயிர்கள் உருகி நிற்பர். மறைமலையும் பாரதியும் திரு.வி.க.வும் மானமுள்ள புலவர்களும் விதைத்து வைத்த நிறைவிதைகள் முளைத்தெழுந்து பசுமை கண்டு நின்றிருந்த தமிழ்ப்பயிர்கள், இந்தி என்னும் உறைவெயிலின் வெம்மையினால் வாடுங் காலை, உழவருளங் களிப்பெய்த வந்த காஞ்சிப் பெருமுகிலை ஈரோட்டுப் **பொருப்பில் தோய்ந்து பெய்ம்மழையைத் தமிழ்மொழியால் வாழ்த்திநிற்போம். கலைமலர்கள் பல பூத்துக் கொத்துக் கொத்தாய்க் கண்குளிர மனங்குளிரக் காட்சி நல்கும் பலவகைய புகழ்மணக்கும் கனிகள் நல்கும் பாடிவரும் தம்பியராம் தும்பி கட்கு நலமருவும் அறிவுத்தேன் சொரிந்து நிற்கும் நாவசைய மொழித்தென்றல் உலவி நிற்கும் உலகிலுளார் இன்பமுறக் குளிர்ச்சி நல்கும் உயர்சோலை காஞ்சியிலே வளர்ந்த தம்மா!
* ஓரிரவு - அவரெழுதிய நாடகம். ** பொருப்பு - மலை |