160 | கவியரசர் முடியரசன் படைப்புகள் - 6 |
அம்மலர்சூழ் சோலையில்தேன் பருகி நாளும் ஆயிரம்பல் லாயிரமாய்ப் பாடிப் பாடித் தும்பிபல பறந்திங்கு வளர்ந்த துண்டு; தும்பிகளால் மகரந்தப் பொடிபரந்தே அம்புவியில் பலமலர்கள் பூக்கக் கண்டோம்; அவற்றிலுறு நறுமணங்கள் பரவிச் சென்று மொய்ம்புடைய கோட்டைஎலாம் மணக்கக் கண்டோம், மொய்த்திருந்து மக்களெலாம் வியக்கக் கண்டோம். பகையென்றும் நட்பென்றும் பாரா வண்ணம் பழிவாங்கும் சிற்றறிவு சேரா வண்ணம் நகைமொழியால் மாற்றலரை ஈர்க்கும் வண்ணம் நாகரிக அரசியலை நடத்திக் காட்டி மிகுபுகழால் உயர்ந்தானை, எளியர் வாழ்வு மேலோங்கச் செய்தானை, எங்கள் எட்டுத் தொகைமொழியில் தோய்ந்தானை, பண்பு காக்கும் அரணாகிச் சூழ்ந்தானைத் தொழுது நிற்போம். |