பக்கம் எண் :

வள்ளுவர் கோட்டம்169

முன்னவர்தம் கவிதைக்கு வலிமை கூட்டி
       முத்தமிழைக் காக்குங்கை அண்ணா கையே.

என்னுயிரை இருவிழியைத் தாயின் மேலாம்
       எழில்மொழியை நான்வணங்குந் தெய்வந் தன்னை
இன்னமுத இலக்கணத்தின் பிறப்பி டத்தை
       இலக்கியத்தின் பேரூற்றைத் தொன்மை கண்ட
தென்னவர்தம் தாய்மொழியைத் தமிழை யிங்குத்
       தீய்க்கவரும் மொழிப்பகையைத் தடுத்துக் காத்து
பன்னலமும் கனிந்துதமிழ் கொழிக்கச் செய்யப்
       பாடுபடும் கைஎங்கள் அண்ணா கையே.

பகையுளத்து மாந்தரையும் அன்பு காட்டிப்
       பண்படுத்தி அரவணைத்துக் காக்குங் கைகள்
மிகையடுத்துக் கூறவிலை; தமிழர் நாட்டின்
       மேலான மானத்தைக் காக்கும் கைகள்
பகைஎடுத்தே எவர்வரினும் சீறி நின்று
       பாரதமாம் இந்நாட்டைக் காக்குங் கைகள்
தொகையெடுத்த திட்டங்கள் தீட்டி நாட்டில்
       தோன்றுதுயர் துடைத்துநலம் காக்குங் கைகள்.