பக்கம் எண் :

வள்ளுவர் கோட்டம்171

முற்கண்ட யாழ்தந்த சுவையோ என்ன
       முத்தமிழின் நடையழகை எழுதிக் காட்டிக்
கற்கஒரு பரம்பரையைத் தோற்று வித்துக்
       கனிமொழிக்குத் தமிழ்மொழிக்கோர் புதுமைசெய்தான்.

நஞ்சுமிழும் பாம்பினையும் மயங்க வைத்து
       நடம்பயிலச் செய்கின்ற மகுடி தானோ
நெஞ்சமெலாம் வயப்படுத்திக் களிப்பில் ஆழ்த்தும்
       நெடுங்குழலாம் நாதசுரக் கருவி தானோ
கொஞ்சுதமிழ் மாமழையோ அருவிக் கூட்டம்
       கூடியதோ ஆற்றொழுக்கோ எனவி யந்து
வஞ்சகரும் மறைந்திருந்து நயந்து கேட்டு
       வாய்மலரும் அவன்பேச்சைப் புகழ்ந்து ரைப்பர்.

எதுகையுடன் மோனையெலாம் எழுந்தெ ழுந்தே
       எக்காளம் இட்டுநடம் புரியும் பேச்சு,
புதுமையுடன் பழமையினைப் பிணைத்து வைத்துப்
       பொலிவூட்டிப் புத்துலகைப் படைத்துக் காட்டும்;
பொதுமைமிகுங் கருத்தலைகள் ஊறி ஊறிப்
       பொங்கிவரும் பேரூற்றை நினைவிற் கூட்டும்;
இதுவரையில் பேச்சரங்கம் காணா ஒன்றை
       இவன்பேச்சிற் கண்டெழிலைப் பெற்ற தன்றோ!

மிகப்பெரிய பேச்சாளர் பேசும் போதும்
       மேவிடுவோர் தொகைமுன்பு நூற்றை எட்டும்
அகத்தொளிரும் நம்தலைவன் பேச்சைக் கேட்க
       ஆயிரம்பல் லாயிரமாய்க் கூடக் கண்டோம்;
நகைச்சுவையும் மதித்தெளிவும் வீரப் பாங்கும்
       நாடகமாய் இலக்கியமாய்க் கலந்து தோன்றும்
பகைச்சுமையைத் தாங்கிகளும் தனித்தி ருந்து
       பாராட்டும் தமிழ்ப்பேச்சின் திறந்தான் என்னே!