உற்றமுதற் படைத்தலைவன் இவனே யன்றோ? ஓயாமல் அன்றுமுதல் இன்றும் காறும் பற்றகத்துக் கொண்டுமொழிப் போரில் நிற்போன் பைந்தமிழ்க்குக் காவலனாய் விளங்கக் கண்டோம். ‘பெரியாரே எனக்கென்றும் தலைவ ராவார் பிறிதொருவர் தலைவரெனக் கொள்ளேன்’ என்றே அறிவாளன் நம்அண்ணன் உறுதி பூண்டான் அத்தலைவர் தமிழ்மொழியைப் பழித்த போதும் சரியான மறுப்புரைக்கத் தவற வில்லை; தாய்மொழிக்குக் காவலன்தான் ஐயம் இல்லை; விரிவான உலகெங்குந் தமிழ்ம ணக்க விழைகின்றான் அதற்குரிய செயலும் செய்தான். சட்டங்கள் பிறகலைகள் தமிழில் ஆக்கத் தலைப்படுங்கால் மனம்பொறுக்கா உளுத்துப்போன விட்டங்கள் ஏதேதோ உளறிக் கொட்டும் வெற்றுரைக்குச் செவிசாய்க்கா வண்ணம் நல்ல திட்டங்கள் பலதீட்டித் தமிழ்வ ளர்க்கும் தீரனவன்; தாய்மொழியைத் தாழ்த்திப் பேசிப் பட்டங்கள் பெற்றவரும் திருந்தி வந்து பைந்தமிழைப் போற்றிடவே செய்த நல்லோன். புரியுமொழி புரியுமொழி எனப்பு லம்பிப் புன்மொழிகள் பலகலந்து பேசு வோர்தம் திரிபுடைய மனப்போக்கை மாற்றி விட்டான்; தெளிவுடைய தமிழ்மொழியா புரிய வில்லை? தெரியவிலை உமக்கென்றால் மனத்தின் குற்றம்; தெள்ளுதமிழ்த் தாய்மொழியின் குற்ற மன்று; உரிமையினை மறந்தமையால், அடிமை நெஞ்சம் உற்றமையால் உமதுமொழி விளங்க வில்லை. |