பக்கம் எண் :

176கவியரசர் முடியரசன் படைப்புகள் - 6

30
காக்குந்தொழில்வல்லான்

சிந்திக்க மாட்டாமல் சீரிழந்து நிற்கின்ற
முந்தைத் தமிழ்நாட்டில் மொய்த்துத் துயர்ப்படுத்தும்
கண்மூடிக் கோட்பாட்டைக் கட்டோடு சுட்டெரித்து
மண்மூடிப் போக மறைத்துத் தொடர்ந்திங்கு
நல்ல அறிவூட்ட நாட்டை வளமாக்கத்
தொல்லை இருளகற்றத் தோன்றும் சுடரிரண்டு;
ஒற்றைச் சுடர்தோன்றும் ஊரதுதான் ஈரோடு
மற்றைச் சுடர்தோன்றி வாழிடமோ காஞ்சிநகர்;
தோன்றும் ஒருசுடர்க்குத் தொண்ணூறு மேவிவரும்
ஆன்றதொரு செஞ்சுடர்க் காறுபத்து தாவிவரும்;
ஈரோட்டில் தோன்றுசுடர் எந்நாளும் ஒய்வின்றிப்
போராட்டஞ் செய்துவரும் பொன்றா நெருப்பாகும்;
காஞ்சிச் சுடரோ கனலாது காய்ந்துமன
வாஞ்சைக் கதிரால் வளர்ந்துவரும் ஞாயிறது;
ஞாயிறு போற்றுதும் ஞாயிறு போற்றுதும்
ஆயிரம் ஆயிரம் ஆண்டுகள் போற்றுதும்;
மாயிரு ஞாலம் வளமுடன் வாழ்ந்திட
ஞாயிறு போற்றுதும் ஞாயிறு போற்றுதும்;
எண்ணும் மனத்தில் இனித்திருக்கும் நல்லவனாம்
அண்ணன் புகழ்சொல்ல ஆயிரம் நாவேண்டும்;
பொன்றாப் புகழ்மணக்கும் புண்ணியன் நற்குணங்கள்;
ஒன்றா இரண்டா ஒருபொழுதில் பாடுதற்கு?