பக்கம் எண் :

வள்ளுவர் கோட்டம்177

தோற்றுவித்த கட்சி துவளாமல் காத்துவந்த
ஆற்றலுக்கு நேர்சொல்ல ஆளொருவர் ஈங்கில்லை;
‘காளையரைக் கொண்ட கழகம் வளர்ந்துவிடின்
நாளைநிலை என்னாகும் நாடே அவர்வயமாம்’
என்றஞ்சிப் பேரரசை ஏற்றிருந்த நல்லோர்கள்
அன்று தடைச்சட்டம் ஆக்கி விடுத்தார்கள்;
‘போயிற்றுப் போயிற்றுப் பூண்டோடு போயிற்று
வாயற்றுப் போயிற்று வாயேது கட்சிக்’கென்
றார்ப்பரித்து நின்றார் அரசியல் சோதிடர்கள்;
போர்ப்பயிற்சி நன்கு புரிந்திருக்கும் நம்அண்ணன்
தாக்கவந்த சட்டம் தலைதூக்க மாட்டாமல்
ஆக்கிவைத்த ஆற்றல் அறிவுளார் போற்றுகின்றார்;
குட்டிக் கலகங்கள் கோள்மூட்டல் அங்குமிங்கும்
எட்டிப் பிடித்தே இறுகமுடி போடல்என
நாளெல்லாம் ஆடிவரும் நாரதர்கள் கூடிஒரு
கேளல்லார் தம்அணைப்பில் கேடு விளைத்தார்கள்;
பேசா தனபேசிப் பேயாட்டம் ஆடிவந்தார்
ஏசா தனவெல்லாம் ஏசி எழுதிவந்தார்;
கூடிக் களிக்குங்கால் கோமான் புகழொன்றே
பாடிப் பிழைத்தவர்கள், பண்பாளன் கால்களையே
ஓடிப் பிடித்தவர்கள், ஊர்ஊராச் சென்றுபல
சாடிப் பழித்தார்கள் சாகும் கழகமென
ஆடிக் களித்தார்கள் ஆகாத கூட்டுறவைத்
தேடிப் பிடித்தார்கள் தேய்பிறைபோ லானார்கள்;
சட்டமென வந்த தடையாம் புறப்பகையால்
எட்டுணையுங் கேடின்றி ஏற்றமிகு நம்அறிஞன்
காத்த கழகததைக் காழ்ப்பு மிகுதியினால்
வாய்த்த அகப்பகைதான் வாடிடச் செய்திடுமோ
என்றஞ்சித் தொண்டரெலாம் ஏங்கி யிருக்குங்கால்