31 ஆழம் அறியா அன்புள்ளம் சிந்தனையால் நாவலத்தால் செய்யஎழுத் தாற்றலினால் இந்தத் திருநாட்டின் ஏறனைய நல்லிளைஞர் நெஞ்சங் கவர்ந்தான் நிலையான தம்பியராக் கொஞ்சி அணைத்துக் குலவி மகிழ்கின்றான் உய்தற் குரியவழி ஓதிவந்த நம்தலைவர் செய்தற் கரியனவே செய்துயர்ந்த நம்பெரியார், தந்திரத்தில் வல்ல தகுதியுள மூதறிஞர், செந்தமிழில் வல்லார், சிவனடியார், மற்றெவரும் அண்ணனுக்கு மூத்தோர் அறிவாளர் ஆனாலும் தண்ணளியன் முன்னிலையில் தம்பியராகிவிட்டார்; அண்ணாநம் அண்ணா என் றப்பெரியர் வாயார அண்ணாவைச் சொல்லி அழைத்ததை நாமறிவோம்; பேச்சாளர் என்று பெயர் சொல்லி மேடைகளில் ஏச்சாள ராகி இழிமொழிகள் கட்டுரைத்துப் பேசிவரும் பித்துடையார் பேச்செல்லாம், நெஞ்சத்து வீசுகிற வேலாகி மேலோரைப் புண்படுத்தும்; நாடாளும் நம்தலைவன் நாவசைத்துப் பேசுங்கால் கூடாரைக் கூடக் குலவிவரப் பண்படுத்தும்; வெல்லரிய சொல்வல்லான் வெற்றி தரும்எழுத்தில் நல்லதொரு முத்திரையை நாட்டிப் புகழ்பெற்றான்; செந்தமிழில் மிக்கபுலம் சேர்ந்ததுபோல் ஆங்கிலத்தும் வந்த புலமுடையான் வாகைத் திறமுடையான்; |