180 | கவியரசர் முடியரசன் படைப்புகள் - 6 |
நான்பிறந்த பொன்னாட்டை நல்லதமிழ் நாடென்று தேன்போல் இனிக்கப்பேர் செய்தானை வாழ்த்துகின்றேன்; என்னுள் கொலுவிருந் தேற்றம் தருபவட்குக் கண்ணுள் கருமணிக்குக் காவியத் தாய்மொழிக்கு மாநாடு கூட்டி மலர்சூட்டிப் பாரெல்லாம் தான்நாடச் செய்தானைத் தாள்பணிந்து போற்றுகின்றேன்; மற்றோர் வளர்ச்சியினால் தன்வளர்ச்சி மாறுமெனச் சற்றேனும் எண்ணாமல் தன்னாற்றல் நம்புமவன், சார்ந்தாரை வாழ்வித்துத் தன்போல் வளர்த்துவிடத் தேர்ந்தானைப் பல்லாண்டு வாழ்கவெனச் செப்புகின்றேன்; கற்றுணர்ந்த நல்லோர்பால் காணுந் திறமையினை உற்றுணர்ந்து போற்றிவரும் உள்ளத்தை வாழ்த்துகின்றேன்; பேராற்றல் வாய்ந்த பேராயக் கட்சியினைப் போராட்டத் தேர்தலிலே பொன்றிவிழச் செய்திடினும் வெற்றிக் களிசிறிதும் வேண்டாப் பெருந்தன்மை உற்றதொரு நற்பண்பை உள்ளூறிப் பாடுகின்றேன்; தொண்டரெலாம் தம்பியராத் தோள்தந்து காக்குமுளம் கொண்டொழுகும் அன்புளத்தைக் கோடிமுறைவாழ்த்துகின்றேன்; தந்தை பெரியாரும், தந்நலத்தை நாடிகளும் தந்த வசைமொழிகள், தாங்கும் இதயத்தை, அண்ணன் குடும்பத்தை ஆணவத்தார் கூறிவந்த புன்மொழிகள் யாவும் பொறுத்திருக்கும் நெஞ்சுரத்தைக் கோடி முறைசொல்லிக் கோவில்கட்டிக் கும்பிட்டுப் பாடி முடித்தாலும் பாட்டில் அடங்காது; நேரு பெருமகனார் நீண்ட ஒருசொல்லைக் கூற மனந்துணிந்தார்; கொற்றமிகு காளையர்கள் சீறி எழுந்தார்கள்; சிந்தனையில் செந்தமிழில் ஊறி வரும் நெஞ்சத்தான் ஒன்றுரைத்தான் தம்பியர்க்கு; |