18 | கவியரசர் முடியரசன் படைப்புகள் - 6 |
எண்ணிலவாய்ச் சாதிமுறை வளர்ந்து விட்டால் யாவரும்நம் கேளிரெனும் உறவுப் பண்பு மண்ணிலன்றோ புதைபட்டுப் போகும்! சாதி மடமையினை வளர்த்துவிடின் மேல்கீழ் என்ற எண்ணமொன்றே தோன்றுமலால் உறவா தோன்றும்? எல்லாரும் ஓரினமாய் வாழ்ந்தா லன்றோ நண்ணிவரும் உறவுமுறை? உறவு தோன்றின் நாவலனாம் வள்ளுவற்கும் மகிழ்வு தோன்றும். உறவுமுறை வளர்ந்துவரின் அவ்வ ளர்ச்சி உளமொன்றித் தளிர்க்கின்ற காதல் காட்டும்; பிரிவுதருஞ் சாதிமுறை வளர்ந்து விட்டால் பேணிவருங் காதலுக்குச் சாவே கூட்டும்; பிறவியிலே மேலென்றுங் கீழ்மை என்றும் பேசிஉயர் காதலையே தீய்ப்ப தற்குச் சிறிதளவும் நாணுகிலோம் சாதி காப்போம் சிந்தனையைப் பேதைமைக்கே கொடுத்து விட்டோம். காதலெனும் மென்மலரைக் கசக்கி விட்டோம் கற்றவரும் அதன்செவ்வி உணர்ந்தோ மல்லோம்; ஓதலிலே திரைதனிலே எழுதும் நூலில் உரைப்பதிலே காதலைத்தான் உயர்த்திச் சொல்வோம் காதலது நம்வீட்டில் புகுந்து விட்டால் கனன்றெழுவோம் சாதியெனும் வாளெ டுப்போம் மோதியதன் நெஞ்சத்தைப் பிளப்ப தற்கே முனைந்திடுவோம் கண்மூடிச் செயலே செய்வோம். சாக்காடு நோக்கிநடை போடும் போதும் சாதிக்கே நடைபாதை போடு கின்றோம்; வாக்காளர் நடத்துதிரு நாளிற் கூட வள்ளுவனே தோற்கின்றான்; சாதி வெல்லும்; |