பக்கம் எண் :

184கவியரசர் முடியரசன் படைப்புகள் - 6

33
யாழ் உடைந்தது

விண்மீன்கள் புடைசூழ்ந்து நிற்க, வான
       வெளியினிலே முழமதியொன் றொளிரக் கண்டோம்;
மண்மீது பயிர்தளிர்க்க உயிர்த ளிர்க்க
       வளர்நிலவைப் பாய்ச்சியது மகிழ்ந்தோம்; அந்தத்
தண்மதியை முகிலொன்று வந்து சூழத்
       தன்னொளியும் மங்கியது மயங்கி நின்றோம்;
*கொண்மூதான் விலகிவிடும் மேலைக் காற்று
       கூடிவரும் காலமிதென் றெண்ணி நின்றோம்;

காற்றடித்த வேகத்தாற் கொடிய மேகம்
       கலைந்ததுகண் டொருவாறு தேறி நின்றோம்;
கூற்றெடுத்த படையெடுப்பில் தோற்று விட்டோம்;
       குளிர்நிலவைக் கருணையிலான் விழுங்கிவிட்டான்;
காற்றடிக்கச் சிதறுண்ட மேகம் எங்கள்
       கண்களிலே புகுந்துநிலை நின்ற தம்மா!
கூற்றுவற்குப் பசியெடுத்தால் இந்த நாட்டைக்
       குளிர்விக்கும் முழுமதிதான் கிடைத்த தேயோ?

வடிவமைந்த யாழொன்று தனது கையில்
       வைத்திருந்தாள் தமிழன்னை; அதனை மீட்டிப்
படிமுழுதும் இசைமயமாப் படைத்து நின்றாள்;
       படர்ந்துவரும் இசைத்தேனைப் பருகி மாந்தர்
உடல்நிமிர்ந்தார் உளம்நிமிர்ந்தார் உயர்வும் உற்றார்;
       உயர்விதனைப் பொறுக்ககிலாக் காலன் என்னும்


* கொண்மூ - மேகம்