பண்பாடு பண்பாடென்று றுரைத்து ரைத்துப் பகைதழுவும் நெஞ்சத்தார் தம்மை யும்போய் நண்போடு தழுவியநற் கைகள் எங்கே? நலமிக்க ஒளிவிளக்காய் வந்த கோவே கண்பாடு கொண்டனையே கல்ல றைக்குள்; காரணமென்? அரசியலில் நீநி னைத்த பண்பாடு காணாத ஏக்கத் தாலோ? பகறியழ எமைவிடுத்துச் சென்று விட்டாய்! விடுதலைநாள் சுதந்திரத்தின் திருநாள் தன்னை வீரத்தின் தியாகத்தின் திருநாள் என்றாய்; அடிமையென ஆக்கிவைத்தோர் கணக்கைத் தீர்த்த அரியதொரு நாளென்றாய் நாற்பத் தேழை; உடைமைஎன வரவேட்டில் கணக்குப் பார்க்கும் உவமைமிகு நாளென்றாய் அறுபத் தேழை; கடமையினை நன்கியற்றி நின்றோய்! ஏனோ கணக்கொன்றும் பாராது மூடி விட்டாய்? பெரும்புரட்சிக் கருத்தெல்லாம் பேசி நிற்பாய்! பேச்சொன்றே கேட்டிருந்தோர் அஞ்சி, நின்னை இரும்புளத்து மனிதனென எண்ணி நாட்டில் ஏதேதோ விளைந்துவிடும் என்றி ருந்தார்; கரும்புளத்து மென்மையினை மேன்மை தன்னைக் காட்டினைநீ குடியாட்சிப் பண்பு காட்டி; பெருங்குணத்தைக் கண்டபினர்; அஞ்சி நின்ற பேணாரும் நின்நட்பை விழைந்து வந்தார். அரசியலைத் திறமுடனே நடத்த வல்லார், அண்ணாநீ தோற்றுவித்த கட்சி தன்னை உரமுடனே வளர்க்கவல்லார் தோன்ற லாகும்; உன்போலப் பாசத்தை வளர்த்துப் போற்றி |