188 | கவியரசர் முடியரசன் படைப்புகள் - 6 |
அரவணைக்க வல்லாரை என்று காண்போம்? அண்ணாவென் றுறவுமுறை சொல்லிச் சொல்லி உரிமையுடன் அழைத்திடயாம் எவர்பாற் செல்வோம்? உனைநினைந்தே நாளெல்லாம் உருகு கின்றோம். படிப்படிநீ உழைத்துழைத்து மேலே சென்றாய்! பாராளும் நிலைபெற்றாய்! அதைப்போல் இன்றும் படிப்படியா வுயிர்த்துயிர்த்து மேலே சென்றாய்! பாடல்களில் நிலைபெற்றாய் சிலையும் பெற்றாய்! அடிப்படையை இழந்ததனால் ஆடி நிற்கும அரண்மனையாய்த் தமிழ்நாடு மயங்கி நின்று துடிப்படையச் செய்துவிட்டாய்! எங்கள் கோவே தொண்டெல்லாம் முடிந்ததென்றா முடித்தாய் வாழ்வை. ‘எழுத்தெனினும் பேச்செனினும் சலிப்புத் தோன்றின் எழுதுவதைப் பேசுவதை நிறுத்து’ கென்று பழுத்துயர்ந்த பட்டறிவால் தம்பி யர்க்குப் பகருவைநீ! நின்வரவால் களிப்பே யன்றி வருமூச்சை நீஎதற்கு நிறுத்திக் கொண்டாய் எழுத்துலகம் பேச்சுலகம் என்றும் நின்னை எதிர்நோக்கி நிற்பதைநீ அறியாய் கொல்லோ? பண்ணாலுன் அருட்புகழைப் பாடு கின்றேன் பணிகின்றேன் மலரடியை; நின்ப டத்தைக் கண்ணார மனங்குளிரப் பார்த்துப் பார்த்து கண்ணீர்கொண் டாட்டுகின்றேன் கருணை வாழ்வே! எண்ணாத நாளொன்று வாழ்வில் இல்லை; இனியதமிழ் வளர்ப்பதிலே உன்னைக் காண்பேன்; அண்ணாஎன் கவிமலரைத் தூவி நின்றே அடியிணையைத் தலைதாழ்த்தி வணங்குகின்றேன். 16.2.1969 |