34 அடக்கத்தை அடக்கம் செய்தோம் படைவலியால் வடபுலத்தைச் சேர வேந்தன் பகையாக்கிப் பணிவித்தான்; நீயோ பேச்சு நடைவலியால் நட்பாக்கிப் பணிய வைத்தாய்! நாவலனே! ‘மன்பதையைக் காக்கும் கொற்றக் குடையுடைய குடிப்பிறத்தல் துன்பம்’ என்று குட்டுவனும் தெளிந்துரைத்தான்; புலவர் பாட்டுத் தொடையுடையாய் ‘முதலமைச்சன் எனினும் நானோர் சூழ்நிலையின் கைதி’ என நீயும் சொன்னாய். ‘அன்றுமுதல் இன்றுவரை தோழர் என்னை அண்ணாவென் றழைக்கின்றார்; அமைச்ச ரான இன்றென்னை ஒருசிலரும் அண்ணா என்பார்; இரண்டுக்கும் இடையிலுள வேறு பாட்டை நன்றுணர்வேன்’ என்றுரைத்தாய்; ‘அமைச்ச ராகி நாடாளும் பொறுப்பேற்றேன் இன்றும் தோழன் அன்றுதரும் நிலைபோல வெண்பொன் ஒன்றே அளிக்கின்றான்; மதிக்கின்றேன் மகிழ்வுங்கொள்வேன். ‘நாடாள வந்தபினர் நூறு நூறு நான் தருவேன் நான் தருவேன் என்று செல்வர் ஓடோடி வருகின்றார்; ஏழை தந்த ஒருவெண்பொன் என்னுடலிற் குருதி யாகும்; மேடாளும் செல்வர்தரும் வெண்பொன் நூறும் மெய்ப்பூசும் சந்தனமாக் கொள்வேன்’ என்றாய்; ஊடாடும் பொருள்நயத்தை எளியோர் தம்பால் உனக்கிருக்கும் அன்புளத்தைக் காட்டி நின்றாய். |