190 | கவியரசர் முடியரசன் படைப்புகள் - 6 |
பிறந்தனைநீ சென்னை எனும் இராச்சி யத்தில்; பெற்றெடுத்த தாய்நாட்டின் இழிவு நீக்கி இறந்தனைநீ தமிழ்நாட்டில்; தமிழ்நா டாக்க ஏற்றதுயர் பற்பலவாம்; தன்ன லத்தைத் துறந்தனைநீ நாட்டுநலம் ஒன்றே வேண்டித் தூயபணி ஏற்றனைநீ; உழைத்து ழைத்துச் சிறந்தனைநீ; அன்புருவே காந்தி யண்ணல் சிந்தையெலாம் நின்செயலில் மிளிரக் கண்டோம். புகழ்மலையின் உச்சிக்கே சென்று விட்டாய்! புவியாளும் முதலமைச்சும் பெற்று விட்டாய்! மகிழ்வுற்றுச் செருக்குற்றுத் திரிந்தா யல்லை; மன்னவனே ‘சாமான்யன்’ என்றே உன்னை இகழ்வாக அடக்கமுடன் சொல்லி வந்தாய்! இனியிந்த அடக்கத்தை எங்குக் காண்போம்? தகவுடையாய் அடக்கத்தை அடக்கம் செய்தோம் தணியாத துயர்க்கடலில் மூழ்கி விட்டோம். 16.2.1969 |