பக்கம் எண் :

வள்ளுவர் கோட்டம்191

35
நெஞ்சம் நெக்குருகும்

பூவுலக வரலாறு படித்துத் தேர்ந்தார்
       புதியதொரு வரலாற்றைப் படைத்து வாழ்ந்தார்
*நாவலர்ந்து வருஞ்சொல்லால் எழுத்தால் நெஞ்சால்
       நயத்தக்க நாகரிகப் பண்பு சேர்த்தார்
தாவிவருந் தொண்டர்களைத் தம்பி என்று
       தன்மானக் குடும்பத்தில் சேர்த்துக் கொண்டார்
ஆவிதனைத் தமிழினத்தின் விடுத லைக்கே
       அளித்துவிட்டார் எமதுயிரில் தளிர்த்துவிட்டார்.

ஆண்டவனைப் பற்றுடையார் அழைப்ப தைப்போல்
       அண்ணாஅண் ணாவென்றே அழைக்கப் பெற்றார்
மீண்டவரைப் போலொருவர் யாங்குக் காண்போம்
       மேலவரை நூலவரைப் பெரியார் சொல்லைத்
தாண்டரிய நெஞ்சினரைப் பண்பா டெல்லாம்
       தழைத்துவரும் மனத்தவரைத் தமிழர் ஆட்சி
மீண்டுவர உழைத்தவரை நினையுந் தோறும்
       மெழுகெனவே நெக்குருகிக் கசியும் நெஞ்சம்.


* நாவலர்ந்து - நா + அலர்ந்து = நாவில் தோன்றி