வருபவரைக் கைகொடுத்து வளர்க்கும் உள்ளம் வாழ்வெல்லாம் நலஞ் செய்தே வளர்ந்த வுள்ளம். கலைத்துறையில் திறமிக்க தலைவ ருண்டு களங்காணாப் போராட்டத்தலைவ ருண்டு கலைத்துவிடும் அரசியலில் தந்தி ரங்கள் காட்டுகிற தலைவருண்டு துறைகள் தோறும் மலைத்தெவரும் பாராட்டும் தலைவ ருண்டு வானநெறி காட்டுகிற தலைவ ருண்டு நிலைத்துவரும் பேரன்பை அண்ணன் போல நெஞ்சத்தில் வளர்த்துவந்த தலைவ ருண்டா? தொண்டர்தமைச் சொக்கட்டான் காய்க ளாக்கிச் சுரண்டிநலம் துய்க்காத தலைவன், ஏழைத் தொண்டர்தமைத் தூண்டிவிட்டுச் சிறைக்க னுப்பிச் ‘சுகபோகங்’ காணாத தலைவன், நல்ல தொண்டருக்குள்தொண்டனெனக் கலந்து நின்று தோள்தந்து துணைநின்ற தலைவன், உற்ற தொண்டர்தமைத் தொண்டராக் கொண்ட அண்ணன் தொண்டுளத்தால் நிலைபெற்ற தலைவன் ஆனான். பேசுபுகழ்ப் பேரறிஞன் எங்கள் அண்ணன் பெற்றிருந்த ஆற்றலுக்கோர் எல்லை யுண்டோ? ஏசுவையும் புத்தரையும் ஏட்டிற் கண்டோம் இன்றவர்தம் பண்புருவை நாட்டிற் கண்டோம் ஏசுமொழி அத்தனையும் தாங்கிக் கொள்ளும் இதயத்தை அண்ணாவின் செயலிற் கண்டோம் வாசமலர் போல்மனத்தான் சிரித்துக் கொண்டே ‘வசவாளர் வாழ்க’வென மொழியக் கேட்டோம். ஒருவழியில் நிலைநின்று நடப்பீர் என்றே உணர்த்துதல்போல் ஒருவிரலைச் சுட்டிக் காட்டிப் |