194 | கவியரசர் முடியரசன் படைப்புகள் - 6 |
பெருமையுற நிற்கின்ற சிலையின் முன்னே பேதையர்போல் துணிகொண்டு முகத்தை மூடி வருமனித உருவங்கள் கண்ட துண்டு; வாராத நோய்வந்து வாடி நின்று மருகுகிற வேளையிலும் வைதா ருண்டு; மாவலியன் பொறுமையொடு தாங்கி நின்றான். நெஞ்சமெலாம் குடிபுகுந்து மெச்ச நின்றான் நெடும்புகழின் படியேறி உச்சி சென்றான் செஞ்சுடர்போல் ஒப்பரிய தலைவன் என்றே சேராரும் உணர்ந்துதலை வணங்க நின்றான் வஞ்சமிலான் நானேநும் தலைவன் என்று மதங்கொண்டு வெறிகொண்டு சொன்ன தில்லை; நெஞ்சுருகச் ‘சாமான்யன்’ என்றே சொன்னான் நெல்வயலில் விளைந்தபயிர் வளைந்தே தோன்றும். தம்பியர்தம் நெஞ்சமெலாம் இதழ்க ளாகத் தனிஅறிவு மகரந்தப் பொடியே யாக வெம்பகைக்கும் இனிமைசெயும் கருணைப் பண்பே வீசிவரும் மணமாகக் கற்ற கல்வி தெம்புடைய தண்டாகச் சுரக்கும் அன்பே தேனாகக் காஞ்சிஎனும் பொய்கை தன்னில் செம்மைநிறத் தாமரைப்பூ மலரும் போது சிறுகாலன் அம்மலரைக் கசக்கி விட்டான். |